கோணசர் குடிகொண்டு அருள் பாலிக்கும் திருகோணமலையின் தெற்கே வயல் நிலம் சூழ மகாவலி நீர் எழில் சேர்க்க பொலிவுடன் விளங்கும் கிளிவெட்டிக் கிராமம், பல நூற்றாண்டு தெண்மை கொண்டது. நீலாப்பளை, மேங்காமம், சம்பூர் போன்ற தொன்மை கிராமங்களில் இருந்து விவசாயம், விலங்கு வேளாண்மை தொழில்களுக்காக இக் கிராமத்தை நாடி வந்த மக்கள் காலப்போக்கில் நிரந்தரமாகவே தங்கி வசிக்கத் தொடங்கியதில் இருந்தே இங்கு ஓர் குடியிருப்பு தோன்றியது. அதனைத் தொடர்ந்து இக்கிராமத்திற்கான தேவைகள் அதிகரித்த நிலையில் பிரிட்டிஷ்ன் ஐந்தாவது ஜோர்ஜ் மன்னர் காலத்தில் கல்வியினை வழங்கும் நோக்கோடு 1885 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த கதிர்காமர் புண்ணியமூர்த்தி என்பவரால் ஆரம்ப பாடசாலையாக இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.






